ஜூலை 24-07-2022 ஞாயிறு தோழன்
ஆண்டின் பொதுக்காலம் 17 ஆம் ஞாயிறு தொநூ 18:20-32, கொலோ 2:12-14, லூக் 11:1-13
- Author அருள்பணி. P. ஜான் பால் --
- Friday, 22 Jul, 2022
திருப்பலி முன்னுரை
இன்று நாம் பொதுக்காலத்தின் 17 ஆவது ஞாயிறு வழிபாட்டினை சிறப்பிக்கின்றோம். இன்றைய நற்செய்தியில், ஆண்டவர் இயேசுவின் சீடர்கள், தங்களுக்கு செபிக்க கற்றுத்தருமாறு அவரிடம் கேட்கின்றனர். ‘செபம்’ என்பது கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே நடக்கும் ஒரு உரையாடல். அந்த உரையாடல் நம்பிக்கையை அடித்தளமாக கொண்டு தந்தைக்கும், மகனுக்கும் நடக்கும் உரையாடல் போல இருக்க வேண்டும் என்பதை, ஆண்டவர் இயேசு கிறிஸ்து ‘தந்தையே’ என்றழைத்து நமக்கு எடுத்துக்காட்டுகிறார். இங்கு அற்புதமான ஓர் நிகழ்வு என்னவென்றால், செபத்தில் நாம் இறைவனிடம் அனைத்தையும் கேட்போம். ஆனால், இங்கே சீடர்கள் செபத்தையே இறைவனிடமிருந்து கேட்கிறார்கள். ஆண்டவர் இயேசு, செபம் என்பது தேவைகளின் தொகுப்பாக மட்டும் இருப்பது அல்ல; மாறாக, நம்மீது இரக்கம் காட்டும்படி, நமக்கு எதிராக குற்றம் செய்பவருக்கு மன்னிப்பு தரும்படி, சோதனைகளிலிருந்து விடுதலைதரும்படி, தந்தைக் கடவுளிடம் மன்றாட வேண்டும் என்பதை செபமாக தருகிறார். இவை அனைத்திற்கும் மேலாக விண்ணுலகில் உமது திருவுளம் எப்படி இருக்கிறதோ அதுபோன்று மண்ணுலகிலும் இருக்கவேண்டும் என்று, செபிக்க அறிவுறுத்துகிறார். ஆண்டவர் இயேசு இன்றைய நற்செய்தியில், விடாமுயற்சியுடன் பலமுறை நீங்கள் தந்தைக் கடவுளிடம் கேட்டுக்கொண்டே இருந்தால், கேட்பதை பெறுவீர்கள் என்று, சொல்லுகிறார். அப்படிச் சொன்னவர் மற்றொரு கருத்தையும் முன்வைக்கிறார். பல நேரங்களில் நாம் செபிப்பது கிடைப்பதில்லை. ஏனெனில், நாம் நமது விருப்பத்திற்கு ஏற்றவாறு ஆண்டவரிடம் செபிக்கிறோம். ஆண்டவரோ, அவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு நமக்குத் தருகிறார். எனவே, ஆண்டவரிடம் செபங்களை முன்வைக்கும் நாம், ஆண்டவரே உமது விருப்பப்படியே எங்களுக்குத் தாரும் என்று மன்றாடுவோம். இதற்கான வரத்தை இத்திருப்பலியில் வேண்டுவோம்.
முதல் வாசக முன்னுரை
சோதோம், கொமோரா நகர்களை இறைவன் அழிக்க நினைக்கிறார். ஆபிரகாம் நீதிமான்கள் பொருட்டு அதை அழிக்காமல் விட்டுவிடுவீரா எனக்கேட்க, ஆண்டவரோ, பத்து நீதிமான்கள் இருந்தால்கூட நகர்களை அழிக்கமாட்டேன் என்று கூறுவதை இம்முதல் வாசகத்தில் கேட்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
நமது பாவங்களால் நாம் அடிமை வாழ்வுக்கு ஆளானோம். நமது பாவங்களை மன்னித்து நமது அடிமை வாழ்வின் கடன்பத்திரத்தை ஆண்டவர் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைந்துவிட்டார் என்று கூறும் இவ்விரண்டாம் வாசகத்தைக் கேட்போம்.
மன்றாட்டுகள்
1. எல்லாம் வல்லவரே! உம் திரு அவையை வழிநடத்தும் திருப்பணியாளர்கள் மற்றும் பொதுநிலையினருக்கு நல்ல உடல் உள்ள நலனைத் தாரும். இவர்கள் காலத்தின் தேவைக்கேற்ப உமது பணிகளை விரைந்து செய்திட வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. இரக்கமுள்ள கடவுளே! நவீனம் என்ற பெயரில் சோதோம் கொமோரா நகர்களைப்போல மாறி வரும் எம் தாய் திருநாட்டின் மீது உமது இரக்கத்தை பொழிவீராக. தங்களது குற்றங்களை உணர்ந்து, நாட்டு தலைவர்களும், மக்களும் மனம்மாற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. எங்கள் விண்ணகத் தந்தையே! எமது பங்கின் இளையோர்கள் உம் திருமகன் இயேசு கிறிஸ்து கற்றுத்தந்த இறையாட்சியின் விழுமியங்களுக்கு ஏற்ப வாழ்ந்து, நீர் விரும்பும் நீதிமான்களாக இவர்கள் உருமாற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. என்றும் வாழ்பவரே! எங்கள் செபங்கள் தேவைகளின் தொகுப்பாக மட்டும் அமைந்து விடாமல், உம் திருமகன் இயேசு கிறிஸ்து கற்றுத் தந்ததுபோல, எங்களுக்கு எதிராக இருப்பவர்களுக்கும் செபிக்கும் உள்ளத்தை பெற்றிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. நலம் தருபவரே! மருத்துவமனைகளில், வீடுகளில் நோயினால் பாதிக்கப்பட்டு, மருத்துவர்கள் கைவிட்ட நிலையிலும், உம்மீது நம்பிக்கை கண்களைப் பதியவைத்திருக்கும் இவர்களுக்கு நலம் தந்து, நீர் வழி நடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
Comment